திருச்சியில் 24 இடங்களை மாநகராட்சி அதிகாரிகள் தகரம் வைத்து முழுமையாக அடைத்து, பொதுமக்கள் உள்ளிருந்து வெளியே செல்லவும் வெளியே இருந்து உள்ளே செல்லவும் தடை விதித்துள்ளனர். திருச்சியில் தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் இதுவரை சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 27 ஆயிரம் பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 23 ஆயிரம் பேர் சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பினார்கள். நேற்று (07.05.2021) ஒருநாளில் மட்டும் சுமார் 750 பேருக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தனியார் மருத்துவமனையில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், நேற்று ஒருநாளில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் நோய்ப் பரவலின் தாக்கம் அதிகம் என்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் என அனைவரும் இணைந்து அந்தப் பகுதிகளையும் தெருக்களையும் தகரங்களை வைத்து முழுமையாக அடைத்துள்ளனர். அதேபோல் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாமல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அதை அறிவித்து, தற்போது நோய் தடுப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.