தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை மறுநாளுடன் (04/04/2021) பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. இந்த நிலையில், அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மற்றொரு புறம் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல், பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வருமான வரித்துறையும், வங்கி கணக்குகளில் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, வருமான வரித்துறைக்கு வரும் தகவலை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், தேர்தல் பறக்கும் படையினரும் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை - மருமகன் சபரீசன் வீடு உள்ளிட்ட அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தற்பொழுது வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சென்னை அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ‘ஜீ ஸ்கொயர்’ பாலா ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டிலும் 'ஜீ ஸ்கொயர்' பாலாவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடு, அலுவலங்கள் உட்பட பல இடங்களில் அடுத்தடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது, அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.