எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல, தன்னுடைய உட்கட்சி எதிரியை சமாளிக்க டி.டி.வி.அணியுடன் கைகோர்த்து, அந்த கட்சியிலுள்ள மூன்று நபர்களுக்கு, அன்றைய நாளில் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் பதவியை வாரி வழங்கியுள்ளனர் அ.தி.மு.க.வினர். அப்பிரச்சனை தற்பொழுது பூதாகரமாகி தலைமை வரை பஞ்சாயத்து சென்றுள்ளதால் கிடுகிடுத்துள்ளனர் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுர நகரத்திற்கென உருவாக்கப்பட்டது A காரைக்குடி கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் லிட்.! கோடீஸ்வரர்கள் மட்டுமே வசிக்கும் இப்பகுதியில் வீட்டு மனையின் மதிப்பாக ஒரு செண்டின் விலை மட்டும் ஏறக்குறைய ரூ.10 லட்சம். இந்த கூட்டுறவு சங்கத்தின் தவறான நடவடிக்கையால் காரைக்குடி நகராட்சியின் பல்வேறு சொத்துக்கள் காரைக்குடி வட்டார முக்கியஸ்தர்கள் வசம் இருப்பதாகவும், இதில் பல ஊழல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மதிப்புமிகு இந்த கூட்டுறவு சங்கத்தில் யார் பதவியில் இருப்பது..? யார் இந்த சொசைட்டியைக் கைப்பற்றுவது என்பதால் இந்த சொசைட்டிக்கு மட்டும் ஏகப்பட்ட போட்டிகள்.
கூட்டுறவு சங்கங்களுக்கென தேர்தல் நடைப்பெற்ற பொழுது, தமிழகத்தில் பெரும்பாலான சொசைட்டிகளை ஆளும் அ.தி.மு.க.வேக் கைப்பற்றி வர, இந்த முறை தான் தலைவராகிவிட வேண்டுமென கட்சியின் இளைஞரணி மா.துணை செயலாளரான வழக்கறிஞர் சிரஞ்சீவி சீனிவாசன் ஆர்வம் காட்டிய பொழுது, உட்கட்சி பிரச்சனையால் அவரை தகுதி நீக்கம் செய்ய வைத்ததோடு மட்டுமில்லாமல், அவரை எதிர்கொள்ள டி.டி.வி.அணியிலிருந்த சீனிவாசன், மீனாம்பாள் மற்றும் கண்ணன் ஆகியோர்களுக்கு பதவியை கொடுத்தது சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. கோபமடைந்த சிரஞ்சீவி சீனிவாசனோ உயர் நீதிமன்றத்தை நாட தேர்தலை நிறுத்தி வைத்தது. அத்தோடு நிற்காமல் தலைமை வரை இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வேளையில், "இந்த கட்சி ஆட்சியில் நீடிக்க வேண்டுமானால் எம்.எல்.ஏ.க்கள்., அமைச்சர்கள், மா.செ-க்கள் மற்றும் ந.செ-க்களின் துணைவேண்டும்." என்ற முடிவிலிருந்தோம். இப்பொழுது கட்சியினைப் பலப்படுத்த களையெடுப்பு அவசியம் என்பதால் நானே பதவியை விட்டு விலகுவதாக உள்ளேன். விரைவில் இதுக்குறித்து விசாரணை நடத்தி, யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்." என ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து உத்திரவாதம் கொடுத்திருப்பதால் தெம்பாக இருக்கின்றனர் உட்கட்சி பிரச்சனையால் ஓரங்கட்டப்பட்டவர்கள். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினரிடையே பரப்பரப்பு நிலவி வருகின்றது.