Skip to main content

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடியப் போராட்டம்

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

inciedent by opposition MPs in the Parliament premises

 

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், இரு அவைகளிலும் உடனடியாக இதுகுறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மதியம் இரு அவைகளும் கூடிய நிலையில், மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் குறித்து உடனே இரு அவைகளிலும் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதையடுத்து நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

 

அதேபோன்று கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாளான நேற்றும் இரு அவைகளிலும் மணிப்பூரில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும். இந்தச் சம்பவம் குறித்துப் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் அவையில் மீண்டும் கூச்சல் குழப்பம் நிலவியதால் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு அவைகளும் முடங்கின. முன்னதாக நேற்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்து இருந்தார்.

 

இந்நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு  மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்தும், ஆம் ஆத்மி எம்.பி. இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்