விருதுநகர் மாவட்டம், தேவதானத்தை அடுத்துள்ள, சாஸ்தா கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ள நகரி ஆற்றிலும் அருவியிலும் குளித்துவிட்டு பொழுது போக்குவதற்காக, விடுமுறை நாட்களில் மக்கள் அதிகளவில் வருவார்கள். போதையில் திளைப்பதற்காகவே, நாள் தவறாமல் சில இளைஞர்களும் அங்கு வருவதுண்டு.
அப்படித்தான், தேவதானத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 8 பேர், அங்கே போதையில் மது பாட்டில்களை உடைத்து, ரகளையில் ஈடுபட்டபோது, பயிற்சி ரேஞ்சர் ரித்திஷ் தடுத்துள்ளார். அந்தக் கும்பல், அவரிடமிருந்த வாக்கி-டாக்கியைப் பிடுங்கி உடைத்ததோடு, தாக்கவும் செய்தனர். அடிபட்டது வனத்துறை ரேஞ்சர் என்பதால் இந்த விவகாரம், சேத்தூர் காவல்நிலையம் வரை சென்றது. தென்காசி தி.மு.க எம்.பி. தனுஷ்குமாரும், ராஜபாளையம் தி.மு.க எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனும், “நம்ம பசங்கதான்..” என்று தலையிட, விவகாரம் அமுக்கப்பட்டது. தாக்குதலுக்கு ஆளான ரித்திஷுக்கு விருந்தெல்லாம் நடத்தி, ‘கூல்’ செய்தனராம்.
நாம் சேத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் பவுல் ஏசுதாஸை தொடர்புகொண்டோம். “இருதரப்பும் வெளியில் பேசி சமாதானமாகிவிட்டது.” என்றார்.
தென்காசி எம்.பி. தனுஷ்குமாரிடம் பேசினோம். “நான் இப்ப டெல்லியில இருக்கேன். அந்த ஊரு பிரசிடென்ட் என்கிட்ட சொன்னார். எல்லாம் படிச்ச பசங்க. நீங்க கொஞ்சம் சொல்லுங்கன்னு. படிச்சிட்டு இந்த மாதிரியா நடந்துக்குவாங்கன்னு திருப்பிக் கேட்டேன். அந்த ரேஞ்சரும் பசங்களும் மாறி மாறி அடிச்சிக்கிட்டாங்க போல. மொதல்ல எம்.எல்.ஏ.கூட ஸ்டேஷன்ல பேசிருக்காரு. சாஸ்தா கோயில் ஏரியாவுல அடிக்கடி இதுமாதிரி குற்றச் சம்பவங்கள் நடக்குது. போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினால்தான், மக்கள் நிம்மதியாக அங்கு வந்து செல்ல முடியும்.” என்றார்.
தாக்கப்பட்ட வன ரேஞ்சர் (பயிற்சி) ரித்திஷை தொடர்புகொண்டோம். “பெரிசா ஒண்ணுமில்ல. சின்ன விவகாரம்தான்.” என்றார், சாதாரணமாக.சாஸ்தா கோவில் ஏரியாவில் அடிக்கடி கொலைகள் நடப்பதாலோ என்னவோ, தாக்குதல் நடத்தியது சின்னதாகிவிட்டது!