விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் இன்றுவரை 20 பேர். இந்த 20 உடன் தொடர்பில் இருந்த 30க்கும் மேற்பட்டவர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று இவர்களின் மருத்துவ அறிக்கையில், இவர்களில் பலருக்கு நோய் தொற்றில்லை என்று கண்டறியப்பட்டதாகவும், அவர்களில் இங்கு வேலைக்காக வந்திருக்கும், டெல்லியை சேர்ந்தவருக்கும் நோய் தொற்று இல்லை என்று நேற்று அவரை அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.
அவரை வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்குமாறும் அறிவுறுத்தி அனுப்பி உள்ளனர். ஆனால் அவரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்று கிடைத்துள்ளது. அதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மீண்டும் அழைத்து வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பதற்காக தேடிசென்றபோது, அவர் தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது. அவரை 3 காவல்துறை தனிப்படை தேடி வருகிறது.
சம்பந்தப்பட்டவரின் மருத்துவ அறிக்கை வருவதற்குள் அவர் எப்படி வெளியே அனுப்பட்டார். இது அதிகாரிகளின் அலட்சியமா, இது எப்படி நடந்தது, அப்படி அனுப்பப்பட்டவரின் முகவரி, செல்போன் எண் அவர் பாதுகாப்பாக வீட்டில் இருக்கிறாரா என்பதை கண்காணிக்க வேண்டிய குழுவினர் என்ன செய்தார்கள். இப்படி பலவிதமான கேள்விகளில் அதிகாரிகள் சிக்கியுள்ளனர். அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு இவரை அடையாளம் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
கரோனா உள்ள ஒருவர் தலைமறைவாகி உள்ளது. அவரால் மற்றவருக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பதட்டமும், பீதியும் கிளம்பியுள்ளது.