தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் பக்கமுள்ள அயன் பொம்மையாபுரம் காலனியைச் சேர்ந்தவர்கள் ஜோதிமுத்து, ரத்தினராஜ் சகோதரர்கள். இருவரும் லாரி டிரைவர்கள்.
மூத்தவர் ஜோதிமுத்துவிற்கு உஷாராணி, மகாலட்சுமி என இரண்டு மனைவிகள். மூத்த மனைவி உஷாராணிக்கு சீமைன் அல்போன்ஸ் ஜீசஸ் (14) என்ற மகனும் ஜாக்குலின் ரோஸி (13) என்ற மகளும் உள்ளனர். சீமைன் அல்போன்ஸ் விளாத்திகுளத்தில் 7ம் வகுப்பு பயில்பவன். 2ம் மனைவி முத்துலட்சுமியின் மகனான எட்வின் ஜோசப் (9) தனியார் பள்ளியின் 3ம் வகுப்பு மாணவன்.
சகோதரர்கள் ஜோதிமுத்துவுக்கும், ரத்தின ராஜூக்குமிடையே குடும்பப்பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மறுபடியும் தகராறும் ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே நேற்று முன்தினம் சிறுவர்களான சீமைன் அல்போன்ஸ், எட்வின் ஜோசப் இருவரும் ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றனர். நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவர்கள் கிணற்றில் மூழ்கி இறந்தது தெரியவர தீயணைப்பு படையினர் சிறுவர்களின் உடலை மீ்ட்டனர். இது குறித்து டி.எஸ்.பி. முகைதீன், இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை விசாரித்தனர். அப்போது சிறுவர்களை ரத்தினராஜ் அழைத்துச் சென்றது தெரியவர, தலைமறைவாகிப் போன ரத்தினராஜை போலீசார் கைது செய்தனர். விசாரணை வாக்கு மூலத்தில் ரத்தினராஜ் தெரிவித்தது விசாரணை அதிகாரிகளையே விறுவிறுக்க வைத்துவிட்டது. ரத்தினராஜ் வாய் திறந்தது இந்தப் பயங்கரம் தான்.
என் அண்ணன் ஜோதிமுத்துவுக்கும் உஷாராணிக்கும் 2005ல் திருமணம் நடந்தது உஷாராணியின் தங்கை மகாலெட்சுமியை நான் திருமணம் செய்ய நினைத்தேன். நான் குடிகாரன் என்பதால் திருமணம் செய்து வைக்க மறுத்தனர். ஆனால் மகாலெட்சுமியை அவரது பெற்றோர் எனது அண்ணனுக்கு 2வதாக திருமணம் செய்து வைத்ததால் நான் ஆத்திரமானேன். நான் விரும்பிய பெண்ணை அண்ணன் மணமுடித்ததால் வேதனை எனக்கு. அதனால் அவரோடு எனக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் நான் குடித்து விட்டுத் தகராறு செய்வதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு எனது மனைவி அவளது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.
தொடர்ந்து எனக்கும் அண்ணனுக்கும் தகராறு நடந்தது. ஆத்திரமான நான், எனது அண்ணன் மகன்களை நீச்சல் கற்றுத் தருவதாக அழைத்துச் சென்று முதலில் எட்வின் ஜோசப்பை கிணற்றில் தள்ளி விட்டுப் பின் சீமைன் அல்போன்ஸை தள்ளி விட்டுத் திரும்பிப் பாராமல் வந்து விட்டேன்.
என்று சலனமில்லாமல் சொல்லியிருக்கிறான் ரத்தினராஜ். விசாராணைக்குப் பின் போலீசாரால் ரீமாண்ட் செய்யப்பட்டான்.