கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அதில் டாஸ்மாக் கடைகளும் அடக்கம். இதனை பயன்படுத்திக்கொண்டு கள்ளச்சாராய வியாபாரிகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டத்தில் எரிச்சாராயம் அதிகளவில் விற்பனை நடக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கனவாய் புதூர் கிராமத்தில் ஒரு வீட்டில் எரிச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை நடந்து வருகிறது என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமாருக்கு தகவல் சென்றது. அவர் வாணியம்பாடி போலீஸாருக்கு அந்த தகவலை கூறி ரெய்டுக்கு அனுப்பினார்.
அந்த கிராமத்தில் பூட்டியிருந்த ஒரு வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 135 கேன்களில் 4725 லிட்டர் எரிசாராயம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதனை கைப்பற்றிய போலீஸார், அந்த வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டுயிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் போன்றவற்றையும் கைப்பற்றினர். அந்த வீட்டின் உரிமையாளர் கோவிந்தராஜ்ஜை தேடிவருகின்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.