திருச்சியில் தனியாக பேசிக்கொண்டிருந்த காதலர்களிடம் அத்துமீறிய கஞ்சா போதை கும்பல் ஒன்று காதலனை அடித்து காவிரி கொள்ளிடம் ஆற்றில் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் அண்ணா பொறியியல் கல்லூரியில் படித்துவந்த துறையூரை சேர்ந்த ஜீவித் என்ற இளைஞர் அவருடைய காதலியுடன் சமயபுரம் டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆற்றுப் பாலத்தின் அடியில் அமர்ந்து தனிமையில் பேசிக்கொண்டிருந்தார். அதே இடத்தில் சற்று தொலைவில் மது அருந்தி கொண்டும் கஞ்சா புகைத்து கொண்டும் இருந்த ஐந்து பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல் அந்த காதல் ஜோடியை மிரட்டி உள்ளது.
அதேபோல் அந்த பெண்ணிடம் கஞ்சா கும்பல் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளது. அதை காதலன் ஜீவித் தடுத்தபோது அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி நழுவி ஓடியுள்ளார். ஆனால் தலைநிக்கா கஞ்சா போதையில் இருந்த அந்த கும்பல் இளைஞர் ஜீவித்தை அடித்து கொள்ளிடம் ஆற்றில் தூக்கி வீசியுள்ளது. தொடர் மழை காரணமாக தற்பொழுது கொள்ளிடம் ஆற்றில் 16,000 அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் நீரின் வேகத்தில் ஆற்றில் அடித்து தூக்கி வீசப்பட்ட ஜீவித் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.
அந்த போதை கும்பலிடம் இருந்து தப்பிய அந்த இளம்பெண் அலறியடித்து ஓடி வருவதை கண்ட அந்த ஊரைச் சேர்ந்த 3 பேர் உதவி செய்ய முன்வந்துள்ளனர். அவர்கள் சென்று கஞ்சா போதை கும்பலை சேர்ந்த 2 பேரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் இருவரும் மண்ணச்சநல்லூரில் உள்ள தேவிமங்கலத்தைச் சேர்ந்த கலையரசன், புள்ளம்பாடி வலக்காடு பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கைதுசெய்யப்பட்ட அந்த இருவரிடமும் மற்ற 3 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் ஜீவித் தூக்கி எறியப்பட்ட இடத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் தேடியும் ஜீவித் உடலானது இதுவரை கைப்பற்ற படவில்லை. சில உபகரணங்கள், தொழிநுட்ப கருவிகள் சரியாக இல்லாததால் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை அந்த மீட்புப்பணி அனைத்தும் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.