தென்காசியிலுள்ள தொழிலதிபர் ஜெயபாலன் தன் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்திருக்கிறார் அவரது மனைவி விஜயலட்சுமி. கடந்த மாதம் 7ம் தேதியன்று மதியம் புல்சர் பைக்கில் பர்தாவுடன் ஒருவர் பின் அமர்ந்திருந்தபடி வந்தவர்கள் விஜயலட்சுமியின் வீடு புகுந்து அவரைக் கட்டிப் போட்டு வாயி்ல் டேப் ஒட்டிவிட்டு பீரோவில் இருந்த 126 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் 35 லட்சம் மதிப்புள்ளவைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தென்காசியில் நடந்த பட்டப் பகல் மெகா கொள்ளைச் சம்பவம் அதிர்வலைகளைக் கிளப்பியது. தென்காசி எஸ்.பி.யான சுகுணாசிங் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார்.அதன் பலனாய் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன், ரமேஸ் மற்றும் அருண் சுரேஷ் என மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்த நகையும் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணையில் மணிகண்டன் ஜெயபாலன் உறவினர். அவரது வீடு வரை வந்து சென்ற பழக்கம் கொண்டவர்.சென்னை கேளம்பாக்கத்திலுள்ள ஜெயபாலனின் மர அறுவை மில்லில் வேலை செய்பவர். இவருடன் அவரது நண்பர்களான ரமேஷ் மற்றும் மேலக்கடையநல்லூர் அருண்சுரேஷ் மூவரும் சேர்ந்தே இக்கொள்ளையை நடத்தியுள்ளனர். இதில் புல்சர் பைக்கை ஒட்டி வந்தவன் ரமேஷ் அடையாளம் தெரியாமலிருக்க பர்தா வேஷத்திலிருந்தவன் மணிகண்டன். ரமேஷ் மட்டுமே கொள்ளையின் போது விஜயலட்சுமியை மிரட்டினான். பர்தா மணிகண்டன் பேசவில்லை. பேசினால் தன் குரல் அடையாளம் தெரிந்து விடும் என்பதால் பேசவில்லை.
இது குறித்து நாம் எஸ்.பியான சுகுணாசிங்கிடம் பேசியபோது,
கொள்ளையின் போது ஒருவர் மட்டுமே பேசினார். மற்றவர் பேசவில்லை. அவர் உறவினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்தது. கண்காணித்ததில் மணிகண்டன் ஒரு நகையை எடுத்துக் கொண்டு போய் சென்னையில் அடகுவைத்தது தெரிய வந்தது. அதைக் கொண்டு அவன் பிடிபட்டதும் கூட்டாளிகள் இருவரும் சிக்கினர். அவர்களிடமிருந்து மொத்த நகையும் மீடகப்பட்டு கார், பைக் கொள்ளைக்குப் உபயோகப்படுத்தப்பட்ட சிம்கார்டு கைப்பற்றப்பட்டது என்றார்.
பிடிப்பட்ட மணிகண்டன் தொழிலதிபர் ஜெயபாலனின் சகோதரன் மகன் ஆவார். மணிகண்டனின் அத்தை மகன் அருண்சுரேஷ். கரோனாவால் ஏற்பட்ட வறுமை வேலையின்மை வசதியான வாழ்க்கைக்காகத் திருடியதாக மூவரும் தெரிவித்துள்ளனர். இவர்களின் வறுமை கரோனாவின் மறைமுகத் தாக்குதலால் விளைந்த வினை.