பழனி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை ஒரு சென்டிமென்ட் இருந்து வருகிறது. அதாவது இதுவரை பழனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.கள் யாரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அப்படிப் போட்டியிட்டாலும், அந்த வேட்பாளர் படுதோல்வியைச் சந்திக்க நேரிடும். அப்படி ஒரு சென்டிமென்ட் பழனி தொகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் மத்தியில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏவான தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில் குமார், இந்த முறையும் தி.மு.க சார்பில் பழனியில் களம் இறக்கப்பட்டார். பழனி தொகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் மத்தியில் ஐ.பி.செந்தில்குமார் மீண்டும் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்ற பேச்சு வெளிப்படையாகவே இருந்தது.
இந்த தகவல் ஐ.பி.செந்தில்குமார் காதுக்கு எட்டியது. அதைத்தொடர்ந்து தான் அந்த சென்டிமென்டுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் களத்தில் தீவிரம் காட்டிய ஐ.பி.எஸ், எந்தெந்தப் பகுதிகள் பலவீனமாக இருக்கிறதோ அதைக் கண்டறிந்து அங்கு கட்சிக்காரர்களை உசிப்பி விட்டு கவனம் செலுத்தினார். அதோடு ஐ.பி.செந்தில்குமாரின் மனைவியான மெர்சி செந்தில்குமார் மற்றும் அவருடைய 12 வயது மகன் ஆதவன் உள்பட குடும்பமே தேர்தல் களத்தில் குதித்து ஐ.பி.செந்தில்குமார் வெற்றிக்காக உழைத்தனர்.
அதுபோல் கூட்டணிக் கட்சி ஓட்டுகள் மற்றும் சிறுபான்மை ஓட்டுகளும் ஐ.பி.எஸ்.க்கு கைகொடுத்தது அதன் மூலம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ரவி மனோகரனைவிட 30,056 ஓட்டுகள் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பழனி தொகுதியின் சென்டிமெண்டுக்கே முற்றுப்புள்ளி வைத்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் உள்பட அரசியல் கட்சியினர் பலர் ஐ.பி.செந்தில்குமாரை பாராட்டியும் வருகிறார்கள். அதுபோல் பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.