சென்னை வேளச்சேரியில் பர்தா அணிந்து கொண்டு பெண் வேடத்தில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
கடந்த திங்களன்று வேளச்சேரி நூறடி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் பர்தா அணிந்தபடி நபர் ஒருவர் நின்று இருந்ததாக கூறப்படுகிறது. முதலில் பெண் என நினைத்து போலீசார் கடந்து சென்றனர். ஆனால் அந்த நபர் பர்தாவுக்கு மேல் ஆண்கள் பயன்படுத்தும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது எனவே இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக அந்த ஏடிஎம் மையத்தை நெருங்கி அந்த நபரிடம் விசாரித்தபோது பர்தா அணிந்த அந்த நபரிடம் இருந்து ஆண் குரல் வந்தது. உடனே அந்த நபர் திடீரென ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர்.
அதன்பிறகே அந்த நபர் பெண்ணல்ல பெண் வேடத்தில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க வந்த ஆண் என தெரியவந்தது. அதேபோல் அந்த நபரிடம் இருந்த இயந்திரத்தை அறுக்கும் கருவியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த நபர் ரவிக்குமார் என்றும், வெல்டிங் கடையில் வேலை செய்து வந்திருப்பதும் தெரியவந்தது. அவர் தனது கடனை அடைப்பதற்காக பர்தா அணிந்து பெண் வேடமிட்டு ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.