விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையில் மது விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு வசூலாகும் தொகை சுமார் ரூ.1,70,000 ஆகும். சூப்பர்வைசராக முருகனும், சேல்ஸ்மேனாக மருதுபாண்டியும், வாட்ச்மேனாக சண்முகவேலும் இங்கு பணிபுரிகின்றனர். இரவில் கடையை மூடும் நேரத்தில் தூரல் விழுந்ததால், வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் பலரும் வரவில்லை.
அந்த நேரத்தில், முகக் கவசம் அணிந்திருந்த 5 மர்ம நபர்கள் இரண்டு டூ வீலர்களில் கையில் அரிவாளுடன் வந்தனர். வாட்ச்மேன் சண்முகவேல் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டிய நிலையில், 2 பேர் மட்டும் கடைக்குள் சென்று சூப்பர்வைசர் முருகனிடமும், சேல்ஸ்மேன் மருதுபாண்டியிடமும், மது விற்ற பணத்தை எடுத்துத் தரச்சொல்லி, மேஜையை அரிவாளால் ஓங்கி அடித்து, மது விற்றுக் கிடைத்த தொகை ரூ.1,50,000-ஐயும், முருகன் மற்றும் மருதுபாண்டியின் செல்போன்களையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்த தகவலறிந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் நேரில் வந்து ஆய்வு செய்தனர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம், டாஸ்மாக் பணியாளர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.