திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான மணிகண்டன். இவரும் அதே ஊரைச் சேர்ந்த ஷோபானா என்பவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள். நான்காவதாகக் கர்ப்பமாகி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வருமாம். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைப்பார்களாம். இந்நிலையில் கடந்த ஜூலை 9ஆம் தேதி இரவு கணவன் – மனைவி இருவருக்கும் சண்டை வந்துள்ளது. மனைவியைப் போதையில் அடித்து உதைக்க, வலி தாங்க முடியாமல் கீழே விழுந்தள்ளார். அக்கம் பக்கத்தினர் மற்றும் ஷோபானாவின் உறவிர்கள், கீழே விழுந்து கிடந்த ஷோபனாவை, அதே ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டார் எனத் தகவல் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியான உறவினர்கள் அங்கேயே போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் ஜூலை 10ஆம் தேதி காலை அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்து உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மணிகண்டனுக்கு வேண்டப்பட்டவர்கள் சிலர், வேலை செய்யும் போது மயங்கி விழுந்து இறந்தார் என்கிற ரீதியில் தகவலைப் பரப்பியுள்ளனர். இது தீவிரமாக பரவியுள்ளது. கணவன் அடித்து மனைவி இறந்தது அக்கம் பக்கம் உள்ள அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க அவரைத் தப்பிக்க வைக்க நினைப்பது ஏன் எனக்கேட்டு ஷோபானாவின் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கினர். வழக்குப் பதிவு செய்துவிட்டோம், நடவடிக்கை எடுக்கிறோம் எனச் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர் போலீசார்.
ஜூலை 11ஆம் தேதி காலை வரை கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரைக் கைது செய்யாததால் ஷோபனாவின் உறவினர்கள் அதிருப்தியடைந்தனர். இன்று செங்கத்தில் போராட்டம் செய்தனர். அப்போது, அங்கிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கினர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. நூற்றுக்கும் அதிகமான போலீஸார் அங்கே குவிக்கப்பட்டு போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரைக் கைது செய்தனர். அதன் பிறகு பெண் வீட்டார் கர்ப்பிணியின் உடலைப் பெற்று அடக்கம் செய்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.