சேலத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட வழக்கில் தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். தன் மனைவியை தவறான நோக்கத்தில் அழைத்ததால் கொன்றதாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் அன்னதானப்பட்டி மணியனூரைச் சேர்ந்தவர் அபிஷேக் மாறன் (29). சொந்தமாக மூன்று கார்கள் வைத்துள்ளார். அவற்றை சேலத்தில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளதோடு, அதே நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் வேலை செய்து வந்தார்.
அபிஷேக் மாறனுக்கு திருமணமாகி விட்டது. கருத்து வேறுபாடு காரணாக கடந்த ஆறு ஆண்டுக்கு முன்பு அவருடைய மனைவி குழந்தையுடன் அபிஷேக்கை பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகு தனது பாட்டியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி காலையில் அந்த வீட்டின் மொட்டை மாடியில் கட்டிலில் அபிஷேக் மாறன் கழுத்து அறுக்கப்பட்டு, சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன், நகர காவல் ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.
கொல்லப்பட்ட அபிஷேக் மாறனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பெண்களுடன் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. சம்பாதிக்கும் பணத்தை அவர்களுக்காகவே செலவிட்டு வந்துள்ளார். அத்துடன், அவர் கால் டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்து வந்த, தாதகாப்பட்டி அம்பாள் ஏரி சாலை பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிரபாகரனின் (28) வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட அறிமுகத்தில் பிரபாகரனின் மனைவியுடனும் நெருங்கி பழகி வந்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில், பிரபாகரனை பிடித்து விசாரித்தனர். அவரும், எருமாபாளையம் ராமசாமி நகரைச் சேர்ந்த நண்பருமான அர்ஜூனன் என்பவரின் மகன் அருள்குமார் (23) என்பவரும் சேர்ந்து, அபிஷேக் மாறனை கழுத்து அறுத்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
கொல்லப்பட்ட அபிஷேக் மாறனுக்கு அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்துள்ளது. பிரபாகரனின் மனைவியுடன் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த அபிஷேக், கொல்லப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பிருந்தே அவரையும் படுக்கைக்கு வருமாறு கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். அதைப்பற்றி பிரபாகரனிடம் அவருடைய மனைவி கூறி அழுததால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் பிரபாகரன், தன் நண்பருடன் சேர்ந்து அபிஷேக்கை கழுத்து அறுத்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பிரபாகரன், அருள் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதித்துறை நடுவர் உத்தரவின்பேரில் இருவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.