கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு பக்கமிருக்க டாஸ்மாக் மூடப்பட்டதால் வேறு விதமான பொருட்களை பயன்படுத்தி போதை ஏற்றிக் கொள்ள முயற்சி செய்து, அதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. ஷேவிங் லோஷன், மெத்தனால் போன்றவற்றை மாற்று போதைப் பொருளாக பயன்படுத்தி அதன் மூலம் உயிரிழந்த நிகழ்வுகளும் தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் பெரம்பலூரில் காயத்திற்கு பயன்படுத்தும் டிஞ்சரை, மாற்று போதை பொருளாக பயன்படுத்திய மூன்று இளைஞர்கள் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது ஒரு பக்கமிருக்க, மதுரை மாநகராட்சியில் போதைக்கு அடிமையாகி குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பவர்களை கண்டெடுத்தது, டாஸ்மாக் மூடி இருக்கும் இந்த தருணத்தில் மது போதையில் இருந்து மீட்பதற்கான சிகிச்சைகளை வழங்கி, அவர்களை குடும்பத்துடன் சேர்த்து வைப்பது போன்ற மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளும் ஒரு பக்கம் நடப்பது மகிழ்ச்சியை தரும் விதமாக உள்ளது.