சொந்தமகன் ஆசையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறிய தந்தையே அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாலி கட்டி குடும்பம் நடத்த வரவேண்டுமென அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ்கண்ணன் (வயது 20). அவரது தந்தை கருப்பு நித்தியானந்தம் (வயது 45). முகேஷ் கண்ணன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நாலுவேதபதி சேர்ந்த இளம்பெண் ஒருவரோடு நெருக்கம் ஏற்பட்ட நட்பு காலப்போக்கில் காதலாக மாறி, அந்தக் காதல் கல்லூரியை கடந்து படிப்பு முடிந்து சென்னையில் வேலை பார்க்கும் இடம் வரை தொடர்ந்தது.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து சொந்த ஊருக்கு வந்தனர். இருவரும் அவரவர் வீட்டில் தங்களது காதலை எடுத்துக் கூறியுள்ளனர். முகேஷ் கண்ணனின் வீட்டில் பெரிய எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனால் அந்த இளம் பெண்ணின் வீட்டிலோ இடியும், மின்னலும், புயலுமாக எதிர்ப்பு வீசியது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண்ணை வீட்டில் அடைத்துவைத்திருந்தனர்.
முகேஷ் கண்ணனோ எனக்கு அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்கலன்னா, உசுரோட இருக்கமாட்டேன் என வைராக்கியமாகவே இருந்தார். அதனால் அவரது தந்தை கருப்புநித்தியானந்தம் அந்தப் பெண்ணை தேடி அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது பெற்றோர்கள் வெளியே அனுப்பாமல் அடைத்து வைத்திருந்த தெரிந்து கொண்டவர், " நான் முகேஷ் கண்ணனின் அப்பா உங்கள் இருவரையும் சேர்த்து வைத்து திருமணம் செய்து வைப்பது என்னுடைய பொறுப்பு, நம்பிக்கை இருந்தால் என்னோடு வா, என்று கூற மிகவும் ஆர்வத்தோடும், சந்தோஷத்தோடும், நம்பிக்கையோடும் காதலனின் தந்தைதானே என அந்த இளம்பெண் அவரோடு சென்றிருக்கிறார்.
அந்த இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு போகிற வழியில் சபல சாமியார் நித்யானந்தாவைப்போல கருப்பு நித்தியானந்தத்திற்கும் இச்சை மூண்டது, விபரீத ஆசையோடு அழைத்துவந்த நித்தியானந்தம் போகிற வழியில் ஒரு இடத்தைத்தேடி அந்தப்பெண்ணை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தாலியும் கட்டி, அவரிக்காடு கிராமத்தில் உள்ள அவரது நண்பன் சக்திவேலின் வீட்டுக்கு அழைத்து சென்று, இனி என்னுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும், இல்லையென்றால் உன்னை தீர்த்துக்கட்டி விடுவேன், என மிரட்டி அடைத்து வைத்துவிட்டு. தனது மகனிடம் அந்தப் பெண் வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டாள் என நடித்திருக்கிறார்.
இதற்கிடையில் அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பித்து நமது வாழ்க்கை இப்படி சீரழிந்து விட்டதே என அழுதுகொண்டே வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசிடம் கூறியிருக்கிறார். இளம்பெண் கூறியதை கேட்டு போலீசாரை அதிர்ந்துபோனார்கள். அதன்பிறகு வழக்குப்பதிவு செய்து, பாலியல் பலாத்காரம் செய்த கருப்பு நித்யானந்தம், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி அம்சரவல்லி ஆகியோரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
உலகையே உலுக்கிய சபலசாமியார் நித்யானந்தா தான் இப்படி என்றால் அந்த பெயரை வைத்திருப்பவர்கள் அனைவருமே இப்படியா என்பதே அங்குள்ளவர்களின் பேச்சாக இருக்கிறது.
நித்தியானந்தத்திற்கு வேண்டபட்ட ஒருவரோ,"இருவரும் காதலிப்பது இருவரது வீட்டிற்குமே பிடிக்கல, ஆனால் அந்த பெண்வீட்டில் எதிர்ப்பு பகிரங்கமாக வெளிபட்டது, கருப்பு நித்தியானந்தம் சற்று வேறுமாதிரி எதிர்ப்பை காட்டியிருக்கார், அதை இப்படி இட்டுக்கட்டி ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க," என்கிறார்.