மதுரையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகாருக்கு உள்ளாகிய நிலையில் அச்சிறுமி உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் மதுரையில் 17 வயது சிறுமி காணாமல்போன நிலையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். நாகூர் அனிபா என்ற இளைஞர் சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரைத் தேடி வந்தனர். நாகூர் அனிபா ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வர, போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அதற்கு முன்பே, போலீசார் தம்மை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த நாகூர் அனிபாவும் சிறுமியும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து எலி மருந்து உட்கொள்ள முயன்ற நிலையில் இறுதியில் தற்கொலை முடிவை கைவிட்டு எலி மருந்தை இருவரும் துப்பியுள்ளனர். இதில் சிறுமிக்கும் மட்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை நாகூர் அனிபா தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் நாகூர் அனிபாவின் தாயார் சிறுமியை அழைத்துச் சென்று அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சிறுமியை அனுமதித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாகூர் அனிபா மற்றும் அவரது தாயாரையும் போலீசார் தேடிவந்த நிலையில் நாகூர் அனிபா, அவரது தாய் மதினா பேகம் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குறிப்பாக நாகூர் அனிபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.