ஈரோடு கருங்கல்பாளையம் கிருஷ்ணன் பாளையம் வீதியை சேர்ந்தவர் 55 வயது ராஜா. இவர் முட்டை வியாபாரி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு 25 வயது பிரேம்குமார், 20 வயது புவனேஷ் குமார் என இரண்டு மகன்களும் 17 வயதில் ஷாலினி என்ற மகளும் உள்ளார்கள். இதில் மகன் பிரேம்குமார் தந்தையுடன் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். மற்றொரு மகன் புவனேஷ் குமார் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
மகள் ஷாலினி அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்களின் தந்தையான ராஜா உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்ற வியாழக்கிழமை இறந்துவிட்டார். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். 8 ந் தேதி மதியம் வரை நீண்ட நேரமாகியும் சிவகாமி வீட்டு கதவு திறக்கப்படவில்லை. சந்தேகப்பட்ட அவரது உறவினர்கள் வீட்டு கதவை தட்டினார்கள். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.
கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் பயந்து போன அவர்களது உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சிவகாமி அவரது மகன்கள் பிரேம்குமார், புவனேஷ் குமார், மகள் ஷாலினி ஆகியோர் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
ருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப தலைவரான ராஜா திடீரென இறந்த சோகத்தில் அவரது குடும்பத்தினர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.