தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில், சட்ட விரோதமாக இயங்கி வந்த டாஸ்மாக் பார் ஊழியர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தண்ணீர்தாசனூர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே அனுமதியின்றி மதுக்கூடம் (பார்) செயல்பட்டு வருகிறது. எடப்பாடி ஆலச்சாம்பாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (32) என்பவர் இந்த மதுக்கூடத்தில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இதே மதுக்கூடத்தில் அண்ணாமலை (30) என்பவரும் வேலை செய்து வருகிறார்.
எடப்பாடி நெடுங்குளம் பூமணியூரைச் சேர்ந்த துரைராஜ் என்பவர், புதன்கிழமை (மார்ச் 11) மதியம் மேற்படி மதுக்கூடத்தில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது மதுக்கூடத்தின் பக்கவாட்டு சுவர் மீது துரைராஜ் சாய்ந்து உட்கார்ந்தபோது, திடீரென்று அந்த சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து பார் ஊழியர்கள் ராமமூர்த்தி, அண்ணாமலை ஆகியோர், உன்னால்தான் சுவர் விழுந்தது எனக்கூறி துரைராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாரில் மது குடித்துக் கொண்டிருந்த மற்றவர்கள், அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் துரைராஜ் அங்கிருந்து வேகவேகமாக வெளியே சென்று விட்டார்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 10 மணியளவில், 7 பேர் கொண்ட கூலிப்படை கும்பலுடன் குறிப்பிட்ட அந்த மதுக்கூடத்திற்கு துரைராஜ் சென்றார். மதுக்கூடத்திற்குள் நுழைந்த வேகத்திலேயே அந்த கூலிப்படை கும்பல், ராமமூர்த்தி, அண்ணாமலை ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ராமமூர்த்தி, சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அண்ணாமலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர். ராமமூர்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக துரைராஜ், மேட்டூர் தங்கமாபுரிபட்டணத்தைச் சேர்ந்த மகேந்திரன், வாசுதேவன் உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.