கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ளது கழுதூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் வேல்முருகன். இவருக்கும் வேப்பூரை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. பவித்ரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் பிரசவத்திற்காகத் தனது தாய்வீடான வேப்பூருக்கு சென்று தங்கியுள்ளார். இந்தநிலையில் கடந்த 28 தேதி இரவு வேல்முருகன் தனது மனைவியைப் பார்த்துவிட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வேப்பூர் சென்றுள்ளார். அங்கு மனைவி பார்த்து விட்டு அன்று இரவு அங்கேயே தங்கியிருந்த வேல்முருகனுக்கு இரவு 11.30 மணியளவில் உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறி மாமியார் உறவினர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு வேல்முருகனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் கொளத்தூரிலுள்ள வேல்முருகனின் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டது. மகனின் உடலை பார்க்க வந்த வேல்முருகனின் தாய் மலர்க்கொடி தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வேல்முருகனின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் வேல்முருகன் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து வேல்முருகன் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது சாவுக்கு காரணமான குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி நேற்று மதியம் வேல்முருகன் உறவினர்கள் வேப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினர். தகவலறிந்து திட்டக்குடி டிஎஸ்பி சிவா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வேல்முருகன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி அதில் சம்பந்தபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
வேல்முருகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அவரின் மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வேல்முருகன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துள்ளதால் அவரின் இறப்பு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் வேல்முருகன் மனைவி பவித்ரா வேறு யாருமல்ல வேல்முருகனின் சகோதரி மகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.