மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களாக நாகரத்தினம், லட்சுமி ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் இவர்கள் இருவரும் தங்களுக்குத் தெரிந்த ஒருவருடன் மூன்று பேராகச் சேர்ந்து திருமங்கலத்தில் இருந்து விமான நிலையம் செல்லக்கூடிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அதன்படி இவர்கள் 3 பேரும் திருமங்கலம் தேவர் சிலை அருகே சென்று கொண்டிருந்தனர்.
அதே சமயம் திருமங்கலத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கனரக லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த தூய்மை பணியாளர்கள் இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது லாரி மோதியதில் இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவரும், லாரி டிரைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போலீசார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தூய்மை பணியாளர்கள் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.