2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்து, திமுக தலைமையிலான புதிய அரசு நேற்று (07.05.2021) அமைந்துள்ளது. இந்தப் புதிய அரசில், மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் ஒரு துறையை உருவாக்கி, அதற்கென்று ஒரு ஐஏஎஸ் அதிகாரியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்திருக்கிறார்.
தற்போது மத்திய மண்டலத்தின் மிக முக்கியமான நகரமாக கருதப்படும் திருச்சி மாநகரம், பெருகிவரும் மக்கள் தொகையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கடந்த 25 ஆண்டு காலமாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை நகரின் புறநகர்ப் பகுதியில் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.என். நேரு, தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளிள் நிச்சயம் திமுக அரசு அமைந்தவுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தைக் கொண்டுவருவோம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைக்க பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான அரசாணை பிறப்பிப்பதற்குள் அடுத்த புதிய அரசு ஆட்சியைப் பிடித்தது. அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. எனவே அன்று கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை மீண்டும் உயிர் கொடுத்து விரைவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் நகரத்திற்குள் நுழையாமல் இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் வந்துசேர்ந்தால், போக்குவரத்து நெரிசல் என்பது பெரிய அளவில் குறைக்கப்படும். எனவே திமுக அரசு பஞ்சப்பூர் பகுதியில் ஆரம்பித்த அந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை விரைவில் செயல்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.