‘ஜெய் பீம்’ திரைப்படம், இருளர் மக்களின் துயர வாழ்வை காட்சிப்படுத்தியது. இந்தப் படத்தைப் பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது மனதை பாதித்துவிட்டது எனத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி இருளர், குறவர் இனமக்கள் வாழும் பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், அரசின் நலத்திட்டங்கள் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
முதலமைச்சரின் இந்த உத்தரவுக்கு முன்புவரை, இருளர் இனமக்கள், நரிக்குறவர், குறவர், பூம்பூம் மாட்டுக்காரர்கள் ஆகியோர் அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் விரட்டியடிக்கும் நிலையும், புறக்கணிக்கும் நிலையுமே பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இருந்தது. அதற்கு அரசுத்துறை கூறிய காரணம், அவர்களிடம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற எந்த ஆவணமும் இல்லை என்பதே.
தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுக்குப் பிறகு அதிகாரிகள், அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களைத் தேடித்தேடி உதவத் தொடங்கியுள்ளார்கள். இதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள் பம்மரமாய் சுற்றுகின்றனர்.
கைத்தறித்துறை அமைச்சர் இராணிப்பேட்டை காந்தி, கிருஷ்ணகிரி – தருமபுரி மாவட்டத்தின் பொறுப்பாளராக உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட மூன்றம்பட்டி கிராமத்திலுள்ள தளபதி நகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 300 இருளர் குடும்பங்கள் வந்து மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு தங்கியுள்ளனர். மேய்ச்சல் புறம்போக்கு நிலம் என்பதால் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்வாரியம் எந்தத் துறையில் இருந்தும், எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. சாலை வசதியில்லாமல், இருட்டில் வாழ்ந்துவருகின்றனர் என அதிகாரிகள் மூலமாக அமைச்சர் காந்தியின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றதும் உடனடியாக அந்தக் கிராமத்துக்குச் சென்றார்.
அங்குள்ள இருளர் இன மக்களோடு உணவு அருந்தியவர், அவர்களின் கோரிக்கைகளை, குறைகளைக் கேட்டார். அப்போது, “எங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டும். அதில் வீடு கட்டித்தர வேண்டும். இங்கு ஆயிரம் பேர் வசிக்கிறோம், எங்கள் பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் வேண்டும். குடிக்க தண்ணீர் இல்லாமல் நீண்ட தூரம் போய் எடுத்துவருகிறோம், தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். இவற்றை எல்லாம் கேட்ட அமைச்சர், உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கிறேன் என உத்திரவாதம் தந்தார். மேலும், அதிகாரிகளிடம் தகுதியான அனைத்து குடும்பத்தாருக்கும் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுங்கள் என வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். அதேபோல், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம், பட்டா வந்ததும் அவர்களுக்கு வீடு கட்டித்தருவதற்கான திட்டங்களைத் தீட்டுங்கள் என உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தெருவிளக்கும், குடிதண்ணீரும் கிடைக்க ஏற்பாடு செய்தவர், 15 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையும், 6 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.
இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சந்தைமேடு பகுதியில் நரிக்குறவர்கள் 70 குடும்பத்தினர் கூரை வீட்டிலும், தார்பாய் மூலம் கட்டப்பட்ட வீடு போன்ற அமைப்பில் பல ஆண்டுகளாக வசித்துவந்தனர். இதுபற்றி தெரியவந்ததும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உத்தரவுப்படி அதிகாரிகள் அவர்களுக்கு அதே பகுதியில் வீட்டுமனை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இலவச வீட்டுமனை பட்டாவை நவம்பர் 12ஆம் தேதி அமைச்சர் காந்தி நேரில் சென்று 67 குடும்பங்களுக்கு வழங்கினார். விரைவில் அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என வாக்குறுதி தந்தார்.
இதேபோல் சோளிங்கர் ஐப்பேடு கிராமத்தைச் சேர்ந்த 9 இருளர் குடும்பங்கள் மழையால் சமுதாய கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், உடை போன்ற தேவைகளை செய்து தந்தார்.