சேலம் - சென்னை எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் சென்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனே விடுதலை செய்க! என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கை: ’’சேலம் - சென்னை எட்டுவழிச் சாலையால் ஏற்படும் பாதிப்புகளை மக்களிடம் விளக்கிக் கூறும் நோக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை நடைபயணம் மேற்கொள்வதென அறிவித்திருந்தது. இதற்காக அனுமதி கேட்டு காவல்துறையிடம் முறையாக மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு வாரம் கழித்து காவல்துறை அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது. அதை மீறி ஏற்கனவே அறிவித்தபடி ஆகத்து 1ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் நடைபயணம் மேற்கொண்டனர். அவர்களைக் கைது செய்து மண்டபம் ஒன்றில் காவல்துறையினர் அடைத்து வைத்தனர். நள்ளிரவு பன்னிரெண்டு மணியளவில் அவர்களை விடுவித்துள்ளனர். ஆனால் அவர்கள் மீண்டும் நடைபயணத்தைத் தொடர்ந்ததால் 13 பெண்கள் உட்பட தொண்ணூறு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. எந்த வித முகாந்திரமும் இல்லாமல் அவர்களைக் கைது செய்துள்ள காவல்துறையின் நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென்றும், அமைதியான முறையில் நடைபயணம் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.
மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அவர்களை அச்சுறுத்தி நிலத்தைப் பறிப்பதை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும். பெரும்பாலான மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் சுமார் இருபது விழுக்காடு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று பாராளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது.
2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்படி 70 சதவீத மக்கள் ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே இத்தகைய திட்டங்களை நிறைவற்ற வேண்டுமென உள்ளது. அதற்கு மாறாக அரசு செயல்படுவது சட்ட விரோதமானதாகும். விளை நிலங்களையும், வனங்களையும் அழித்து யாரோ சிலர் லாபம் அடைவதற்காகவே இந்த எட்டு வழி சாலை அவசரஅவசரமாக அமைக்கப்படுகிறது.
அமைதியான முறையில் அறவழியில் போராடுவதைக்கூட அனுமதிக்க மறுப்பதும், காவல்துறையின் துணையோடு சர்வாதிகார ஆட்சி நடத்த முயற்சிப்பதும் நல்லதல்ல. மக்களின் எதிர்ப்பை மீறி இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் அதற்குரிய அரசியல் விலையை ஆட்சியாளர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.’’