"நான் அப்படித்தாங்க! சைக்கோன்னு சொன்னால் சைக்கோதான்! அதனால்தான் அப்படிக் கொன்றேன்" என வாக்குமூலம் கூறி ஒட்டு மொத்த காவல்துறையையும் அலறவிட்டுள்ளான் முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன்.
தமிழகத்தையே உலுக்கிய நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் ஓய்வுபெற்ற அதிகாரி முருகசங்கரன் மற்றும் வேலைக்காரப்பெண்மணி மாரியம்மாள் உள்ளிட்ட மூவர் கொலையில் சாவகாசமாக துப்பு துலக்கிய நெல்லை காவல்துறையை நம்பாமல், இந்தக் கொலை வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியுள்ளோம் என அவசரம் அவசரமாக அறிவித்தது தமிழக காவல்துறை இயக்குநரகம். எனினும், "மூவர் கொலையின் பிரதான குற்றவாளி பாளையங்கோட்டை புதுக்குளம் கார்த்திகேயனே... அவனை பிடித்து வைத்து விசாரித்து வருகின்றோம். கொலைக்காக அவன் பயன்படுத்திய கார் மற்றும் ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளோம்" என தாங்களே கொலைக்குற்றவாளியைப் பிடித்ததாக மார்தட்டிக் கொண்டது நெல்லை சரக காவல்துறை.
இது இப்படியிருக்க, கொலை வழக்கு நேற்று சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டு, திருநெல்வேலிக்கு சென்று இன்று காலை விசாரணையை தொடங்க இருக்கிறார். அதற்கு முன் எப்பாடுபட்டாவது குற்றவாளி கார்த்திகேயனிடமிருந்து வீடியோ வாக்குமூலத்தை வாங்கப் போராடி வருகின்றது தனிப்படைகள். அதில், "உன்னுடைய கார் அந்தப் பக்கம் கடந்து சென்றதும், நீ கையில் மஞ்சள் பையுடன் நடந்து சென்றதும் தெள்ளத் தெளிவாக சிசிடிவி காட்சிகள் இருக்கு" என அதிகாரி ஒருவர் கேள்வியாகக் கேட்க, "எங்கே அதை காண்பிங்க" என அந்தக் காட்சியைப் பார்த்து, "சூப்பர்! நான்தான்!" என்றிருக்கின்றான். ”எதற்காக, யாருடன் சேர்ந்து இந்தக் கொலையை செய்தாய்..?" என அடுத்த கேள்விகளைக் கேட்க, "ஏன்..? என்னையப் பார்த்தால் எப்படி நினைக்கிறீங்க..? ஒத்த ஆளாத்தான் செய்தேன். நான் செய்ய முடியாதா என்ன..?" என எதிர்க்கேள்வி கேட்டு மடக்கினான் கார்த்திகேயன். விடாத தனிப்படை டீமும், "சரி, நீ கையில் மஞ்சள் பையில் கொண்டு சென்றாயே அது என்ன?" என்று கேட்டது. "அது ஆப்பிள் பழம்" என்றிருக்கின்றான். ”அது கொலை நடந்த இடத்தில் இல்லையே, கொலைக்கான ஆயுதங்களை யார் கொண்டு வந்தது?" என விடாப்பிடியாக கேட்க, "அதை நீங்க கண்டுபிடியுங்க" என்றிருக்கின்றான் கார்த்திகேயன்.
"அந்தம்மா (முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி } உயிரோடு இருக்கும் வரை நான் வளரமுடியாது. அது எவ்வளவு அவமானம் தெரியுமா? கடைசிவரை இப்படியே இருப்பதா? அதனால்தான் கொலை செய்தேன்! ஆத்திரம் தீரும்வரை குத்தினேன். நீங்க என்னை சைக்கோ என்றால் நான் சைக்கோதாங்க!" என கொலைக்கான காரணமாக வாக்குமூலத்தை தொடர்ச்சியாகக் கொடுத்து வருகின்றான் கொலைக் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கும் கார்த்திகேயேன். இதே வேளையில், "ஒருத்தர் இந்தக் கொலைகளை செய்திருக்க முடியாது, ஒன்றிற்கு மேற்பட்டவர்களே செய்திருக்க முடியும். கொலை நடந்த தடயத்தின் அடிப்படையில் பார்த்தால் பெரிய ஆயுதங்களை கொலைகாரன் பயன்படுத்தியிருக்க வேண்டும். அது போக அவன் நடந்து செல்கையில் கையிலுள்ள மஞ்சள் பையில் வைத்திருந்தது என்ன? அப்படியே அவன் கூறியபடி மஞ்சள் பையில் இருந்தது ஆப்பிள் என்றால் அது எங்கே?" என விடைதெரியாத கேள்விகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றது நெல்லைக் காவல்துறை.