தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தென்சென்னைக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் சீனியர் சிட்டிஷன்கள் முதல், முதன்முறை வாக்காளர்கள் வரை காலையிலேயே வாக்குச் சாவடிக்கு விரைந்து வந்ததை பார்க்க முடிந்தது. கியூவில் நின்று அவர்கள் வாக்களித்தனர். சீனியர் சிட்டிசன்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனி கியூ வைத்திருக்கலாம் என்கிற ஆதங்கம் பலரிடமும் வெளிப்பட்டது.
அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் ஆர்வமுடன் வாக்குச் சாவடிக்கு வந்தனர். வாக்குச் சாவடிக்கு வந்த சினிமா பிரபலங்களில் முதல் நபராக இருந்தார் நடிகர் அஜித் திருவான்மியூர் அரசு பள்ளிக்கூடத்தில் அமைந்திருந்த வாக்குச் சாவடிக்கு தனது மனைவி சாலினியுடன் காலை 6.40-க்கெல்லாம் வந்து விட்டார் நடிகர் அஜித்.
மனைவியைத் தவிர தன்னுடன் யாரையும் அஜித் அழைத்து வரவில்லை. அவரை கண்டதும் வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அலுவலர்களும், அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளும் அவர்களை உட்காரச் சொன்னார்கள். ஆனால் அஜித்தும் அவரது மனைவியும் , ’’வேண்டாங்க! நன்றி ‘’ என்று சொன்னார்கள். 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியதும் வரிசையில் நின்று அவர்கள் வாக்களித்தனர். அஜித் வந்திருப்பதையறிந்து அவரிடம் பேசுவதற்கு இளம் வாக்காளர்கள் முயற்சித்தனர். அதனை விரும்பாத அஜித், ‘’இது ஓட்டுப் போடக்கூடிய இடம். எங்களை சாதாரண மனிதராக பாருங்கள் ‘’ என்று கைப்கூப்பினார் அஜித்.
தேர்தல் அலுவலர் ஒருவர், ‘’ காலையிலேயே வந்துவிட்டீர்களே, சார் ?’’ என்று கேட்க , ‘’ ஓட்டுப் போடுவதைப் பெருமையாக நினைக்கிறேன். முதல் நபராக நான் வரும் போது, என்னை பார்க்கும் எனது ரசிகர்களுக்கு காலையிலேயே ஓட்டுப் போட வேண்டும் என்கிற உந்துதல் அவர்களுக்கு கிடைக்கலாம். ஓட்டுப் போடுவதை பெருமையாக நினைத்து வாக்குச் சாவடிக்கு மக்கள் வர வேண்டும் என்பதற்காகத்தான், வாக்களிக்கும் முதல் நபராக நாம் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தில் காலையிலேயே வந்தேன். தேர்தல்னு வந்தால் வாக்களிக்கும் முதல் நபராக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ‘’ என்று சொல்லி, தேர்தல் அலுவலரை வியப்பில் ஆழ்த்தினார் நடிகர் அஜித்.