ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 16 லட்சம் ரூபாயை இழந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த வெள்ளியன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை. சுரேஷின் மனைவி கே.கே.நகர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்சம் ரூபாயை இழந்ததால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற ரீதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மெரினா கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அது சுரேஷின் உடல் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் போலீசாருக்கு கிடைத்தது. அதில் 'காலில் மண்டியிட்டு கேட்கிறேன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தயவு செய்து தடை விதிக்க வேண்டும்' என உருக்கமாக எழுதி இருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.