கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கூழாங்கற்களை கடத்திச் சென்ற லாரியை சுரங்க துறையினர் துரத்திச் சென்று பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சட்டவிரோதமாக கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக நள்ளிரவில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது பச்சைவெளி என்ற கிராமப் பகுதியில் லாரி ஒன்று அதிக வேகமாக சென்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை துரத்திச் சென்று மடக்கி பிடித்து சோதனையிட்டதில் அதில் கூழாங்கற்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பிச் சென்ற நிலையில் அவரை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருவதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.