திருவெறும்பூர் அருகே உள்ள மணிகண்டம் செட்டி ஊரணி பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டை காரைக்காலைச் சேர்ந்த சௌந்தரராஜன் கார்த்திக் (35) என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். ஆனால் அவா் வாடக்கைக்கு எடுத்த வீட்டில் தன்னுடைய நண்பா்கள் மூலம் பாண்டிச்சேரியில் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்களை வாங்கி வந்து திருவாரூர் பாலமுருகன் (32), வெற்றிச்செல்வன் (22), விஜயகுமார் (23), சூர்யா (25) ஆகியோரை வைத்து போலி மதுபானங்களை தயாரித்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக மது அமலாக்க தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிரடியாக அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது கார்த்திக், பாலமுருகன், வெற்றி செல்வன், சூர்யா, விஜயகுமார், ஆகிய 5 பேரும் போலி மதுபானங்களை பாட்டிலில் நிரப்பி ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டிருந்தபோது பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 1,700 மதுபான பாட்டில்கள், இன்னோவா கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதோடு தப்பி ஓடிய வீட்டின் உரிமையாளர் வெள்ளசாமியைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 5 லட்சத்து 14 ஆயிரத்து 400 மதிப்பிலான மதுபானங்களை திருச்சி அருகே உள்ள இருங்களூர் வனப்பகுதியில் டி.எஸ்.பி முத்தரசு தலைமையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி மற்றும் போலீசார் அழித்தனர். மேலும் இதுதொடர்பாக ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த பாஸ் என்ற பாஸ்கரன்(36), காரைக்கால் பகுதி கார்த்திக் (33) ஆகிய இருவர் மீது போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.