கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகில் உள்ள பகண்டை கூட்டுசாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது தொண்டநந்தல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர், சட்டவிரோதமான முறையில் நாட்டுத்துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். இந்தத் துப்பாக்கி மூலம் அப்பகுதியில் இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாடியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி மாலை வீட்டில் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து அதை சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்தது. அதில் இருந்து புறப்பட்ட குண்டு அருகில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவி டெய்சி மேரி கழுத்தின் வலதுபகுதியில் துளைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியராஜ், டெய்சி மேரியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த தகவல் அந்த கிராமத்தில் பரவியது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் பகண்டை கூட்ரோடு காவல் நிலையத்தில் கள்ளத்தனமாக ஆரோக்கியராஜ் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தது சம்பந்தமாக புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த ஆரோக்கியராஜ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அந்தத் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அந்த துப்பாக்கி எப்படி வந்தது, இதேபோல் இன்னும் இப்பகுதியில் ஆரோக்கியராஜ் போன்று வேறு யாரேனும் அனுமதி இன்றி நாட்டுத்துப்பாக்கி வைத்துள்ளார்களா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.