அண்மையில் தமிழ்நாட்டில் 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தியிருந்தார். தன்னார்வலர்களைக் கொண்டு இந்த திட்டத்தின் மூலம் கல்வியை மாணவர்களுக்கு வழங்க அரசு திட்டம் வகுந்திருந்தது. திருச்சியில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த 8 கலைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில், திருச்சி தொட்டியம் அருகே ஒரு கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், அந்த குழுவைச் சேர்ந்த சங்கர் என்பவர் பள்ளிக் கல்வித்துறையின் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் என்ற டி ஷர்ட்டுடன் டாஸ்மாக் கடையில் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு மது வாங்கியதோடு, மதுவை 'இல்லம் தேடி கல்வி' பிரச்சார வாகனத்திலேயே வைத்து கொண்டுசென்றார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், அது வைரலானது. பலருடைய கண்டனத்தையும் பெற்றது. இதுதொடர்பான புகார் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளிக்கு செல்ல, அந்தக் கலைக்குழுவைப் பிரச்சாரத்திலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் முதன்மை கல்வி அலுவலர்.