நேற்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார் குப்பத்தில் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அப்பொழுது மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''கரோனாவால் இழந்த காலத்தை ஈடுகட்ட அதிகப்படியான முயற்சிகளை மாணவர்கள் செய்தாக வேண்டும். பள்ளி நேரத்தில் மட்டுமே மாணவர்களை மடைமாற்றம் செய்துவிட முடியாது. அதனால் தான் பள்ளி முடிந்த பிறகும் மாணவர்களுக்கு சில பயிற்சிகள் தரப்போகிறோம். இதற்கு ஆசிரியர்களுடன் சேர்ந்து சில தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் முன்வந்திருக்கிறார்கள். இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்திருந்தார்.
இத்திட்டத்தில் தன்னார்வலர்களை இணைப்பது என்பது ஏதேனும் சிக்கலை ஏற்படுத்துமா என்ற பேச்சுக்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 'தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கைதான் செயல்படுத்தப்படும். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை. மாநில அளவிலான கல்விக் கொள்கையை வகுக்கக் கல்வியாளர் அடங்கிய குழு அமைக்கப்படும். 'இல்லம் தேடி கல்வித் திட்டம்' தமிழக மாணவர்களின் கல்வியை மேலும் வலுப்படுத்தும். 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு அனைத்து தரப்பு மக்களும் ஆதரிக்கவேண்டும்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சேவையாற்ற 86,550 தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். இந்தத் திட்டத்தால் பள்ளி செல்லும் வயதிலுள்ள குழந்தைகள் அனைவரும் பள்ளிக்குச் செல்வது உறுதி செய்யப்படும். மாணவர்களைக் கருத்தில் கொண்டு தன்னார்வலர்கள் ஆசிரியர்களுக்கும் சமூகத்திற்கும் பாலமாகச் செயல்படுவார்கள். அரசுப்பள்ளிகளில் நல்லெண்ண தூதுவர்களாகத் தன்னார்வலர்கள் செயல்படுவார்கள். 'இல்லம் தேடி கல்வி' திட்டம் குறித்து சில மாற்றுக் கருத்துக்கள் அரசின் கவனத்திற்குத் தெரியவந்துள்ளது. தன்னார்வலர்கள் தேர்வு செய்யும் முறை, பங்களிப்பு, கற்றல் மேம்பாடு ஆகியவை கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிப்பவர்கள் மட்டும் தன்னார்வலர்களாக அனுமதிக்கப்படுவார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.