தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவை ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, பணப்பட்டுவாடாவை தடுத்தல் உள்ளிட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் ஐ.ஜி., உதவி ஆணையர்கள், டி.எஸ்.பி.க்கள் உள்பட 10 பேரை தேர்தல் அல்லாத பணிகளுக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தென் மண்டல ஐ.ஜி.முருகன், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் அன்பரசன், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர்கள் வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி, வேல்முருகன், சென்னை வடக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் கோவிந்தராஜா, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக டி.எஸ்.பி. வல்லவன், வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு விழுப்புரம் டி.எஸ்.பி.ராதாகிருஷணன், ராமநாதபுரம் குற்ற ஆவணக்காப்பக டி.எஸ்.பி. சுபாஷ், திருச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. கோபாலச்சந்திரன் ஆகியோர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.