தைரியம் இருந்தால் சட்டமன்றத்தை கூட்டுங்கள்: ஸ்டாலின் சவால்

கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ இல்ல திருமணம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அவர் பேசியதிலிருந்து, "கடந்த வாரம் நடைபெற்ற துணை முதல்வா், அமைச்சா் பதவியேற்பு விழாவின் போது ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்-ன் கையை பிடித்து ஆளுநா் கோர்த்து வைத்ததன் மூலம் மோடியின் கட்டப்பஞ்சாயத்தை ஆளுநா் உறுதிப்படுத்தியுள்ளார். அணிகள் இணையும் முன்பாகவே ராஜ்பவனில் அமைச்சா்களின் வருகைக்காக ஆளுநா் காத்துக் கொண்டு இந்தார். துணை முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீா் செல்வத்திற்கு ஆளுநா் பூங்கொத்து கொடுத்த அவல நிலையும் நடைபெற்றுள்ளது.
நீட் தோ்வில் தமிழக மாணவா்களின் நலனிலும், நெடுவாசல் பகுதியில் போராட்டம் நடத்திவரும் பொதுமக்களின் நலனிலும் ஆளும் கட்சியினருக்கு அக்கறை இல்லை. மத்தியில் ஆளும் பா.ஜ.க.விடம் தமிழக நலன் அடகு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜீலை மாதம் 19ம் தேதி சட்டமன்றத்தில் நீதி கேட்டு குட்கா எடுத்துச்செல்லப்பட்ட விவகாரம் தொடா்பாக 40 நாட்கள் கழித்து நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனா். சட்டமன்றத்தில் பெரும்பான்மைய நிரூபிப்பதில் இருந்து தப்பிக்கவே குட்கா விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு தைரியம் இருந்தால் சட்டமன்றத்தை கூட்டுங்கள். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு விவாதம் நடத்துங்கள்.
தி.மு.கவுக்கு கொல்லைப்புற வழியாக ஆட்சியை பிடிக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் ஆதரவுடன் ஆட்சியை பிடிப்போம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
-சுந்தரபாண்டியன்