Skip to main content

''நாங்கள் தடுப்பணை கேட்டால் நீங்கள் மணல் குவாரியை கொடுக்குறீங்க''-பாமக அன்புமணி ராமதாஸ் விமர்சனம் 

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

"If we ask for a dam, you give us a sand quarry" - pmk Anbumani Ramadoss review

 

இரு திராவிட கட்சிகளும் தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் துரோகம் செய்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றமச்சட்டியுள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''50 ஆண்டுகாலம் இந்த இரு கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு உண்மையான வளர்ச்சி கிடைக்கவில்லை. எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. விவசாய பிரச்சனைகள் இருக்கிறது. இன்று ஒரு கிலோ தக்காளி விலை 140 ரூபாய். இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய். இதே விவசாயிகள் தக்காளியை சாலையில் போட்டு கொட்டினார்கள், மிதித்தார்கள். அறுவடை கூட செய்யாமல் செடியிலேயே விட்டுவிட்டார்கள் தக்காளியை. ஏனென்றால் விலை இல்லை. ஆனால் இந்த இரண்டு மாதத்தில் 140 ரூபாய் ஒரு கிலோ தக்காளி. இதற்கும் விவசாயிகளுக்கும் சம்பந்தம் கிடையாது. இடையில் இருக்கின்ற தரகர்கள்தான் சம்பாதித்துக் கொள்கிறார்கள். ஆனால் என்ன செய்திருக்க வேண்டும் தக்காளி மட்டுமல்ல எத்தனையோ காய்கறிகள் இருக்கிறது, குளிர்பதன கிடங்குகள் ஒவ்வொரு பகுதியிலும் கட்டி கொடுத்து விலை குறைவாக இருக்கின்ற சூழலில் அதையெல்லாம் கிடங்குகளில் பாதுகாத்து வைத்து விலைவாசி ஏறுகின்ற காலத்தில் அவற்றை மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். அதைத்தான் உண்மையான வளர்ச்சியாக நான் பார்க்கின்றேன்.

 

இதை செய்ய தவறி இருக்கிறது திராவிட ஆட்சி. பெருமையாக இவர்கள் திராவிட மாடல் திராவிட மாடல் என்று சொல்கிறார்களே விவசாயிகளுக்கு இங்கு என்ன திராவிட மாடல் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் நீர் மேலாண்மைக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் என்ன ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஒரு தடுப்பணை கேட்கிறோம். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டவில்லையா எனக் கேட்டால் அவர்கள் கொடுப்பது மணல் குவாரியை. இதெல்லாம் விவசாயிகளுக்கும் தமிழக மக்களுக்கும் எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா?  கர்நாடகா கூட சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் தண்ணீர் வேண்டுமென்று, ஆனால் தண்ணீர் வரும் நேரத்தில் அதை பாதுகாக்கிறார்களா?''என கேள்வி எழுப்பினார். 

 

 

சார்ந்த செய்திகள்