திருவண்ணாமலையில் இன்று ( 22.10.2023) 8 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 14 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கும் திமுக வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தொண்டர்கள் தான் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி (Secret Of My Energy). இந்த பாசப்பிணைப்பை உடன்பிறப்பே என்ற சொல் மூலமாக உருவாக்கி கொடுத்தவர் கலைஞர். திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் திமுகவும். அதை யாராலும் பிரிக்க முடியாது. திமுக உருவான போது நடந்த முதல் பொது கூட்டத்தில் 1451 ரூபாய் வசூல் ஆனது. அதில் 100 ரூபாயை பாவூர் சண்முகம் வழங்கியது. 1957 தேர்தலில் முதல் முதலாக திமுக போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற்றனர். அந்த 15 பேரில் 3 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதில் பாவூர் சண்முகமும் ஒருவர் ஆவார். முதல் நாடாளுமன்ற தேர்தலில் 2 பேர் வெற்றி பெற்றனர். அதில் ஒரு தொகுதி திருவண்ணாமலை ஆகும்.
வாக்குச்சாவடி முகவர்கள் பெற்றுள்ள பயிற்சி ஒரு தேர்தலுக்கானது மட்டுமல்ல. இந்த பயிற்சி அனைத்து தேர்தல்களுக்கும் பொருந்தும். வாக்குச்சாவடி முகவர்களை நம்பிதான் நாற்பதும் நமதே என்று முழங்கி வருகிறோம். ஒவ்வொரு வாக்காளர்களின் குடும்பத்தில் ஒருவராக வாக்குச்சாவடி முகவர்கள் மாற வேண்டும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “தரையில் ஊர்ந்தவர்கள் தலை நிமிர்ந்து பார்த்தால் தமிழ்நாட்டின் முன்னேற்றம் தெரியும். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள விடியல் இந்தியா எங்கும் வரும் காலம் கனிந்துவிட்டதை, திருவண்ணாமலையில் கூடியிருந்த பாக முகவர்களின் எழுச்சி காட்டுகிறது. தீபம் தெரிவது போல் ஒளி தெரிகிறது. நிச்சயம் இந்தியா வெல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக திருவண்ணாமலையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட அருணை பன்னோக்கு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு கையடக்க மடிக்கணினிகளை வழங்கினார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையையும் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.