திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உமேஷ் (29) ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஏப்ரல் 4 ஆம் தேதி மதிய சாப்பாட்டிற்காக ஆரணி சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள சைவ உணவகத்திற்கு சென்று 75 ரூபாய் தந்து சாப்பாடு டோக்கன் வாங்கியுள்ளார். வாழை இலை போட்டு சாப்பாடு வைத்துள்ளார்கள். சாம்பார் ஊற்றியபோது அதில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டபொழுது, “புழு இருந்தா என்னை என்ன செய்யச் சொல்ற? மூடி வைத்துவிட்டு வெளியே போ” என்று ஒருமையில் பேசி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அவர்களின் பதிலால் அதிர்ச்சியான உமேஷ் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். புகாரைப் பெற்ற ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் புகழ் ஓட்டல் உரிமையாளர்களிடம் விசாரித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று புகார் மனுவை பெற்றுக் கொண்டுள்ளார்.
ஆரணியில் தொடர்ச்சியாக சில சைவ அசைவ ஓட்டல்களில் தரமற்ற உணவுகளை வழங்குவது வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பொரியலில் எலி தலை, பிரியாணியில் கரப்பான் பூச்சி, காடையில் புழு என தொடர்ந்து உணவகங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தரமற்ற உணவால் 16 வயது மாணவன் ஒருவன் கடந்தாண்டு உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்கள் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆரணி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.