
பரியேறும் பெருமாள் திரைப்படத்தை கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றிருக்கும் படம் பரியேறும் பெருமாள். உலக சினிமா தரத்தில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்தப் படம் சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டு அனைவரும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்காக பா.ரஞ்சித் சிறப்புக் காட்சியை நேற்று ஏற்பாடு செய்தார்.
படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா, மகன்
உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோருடன் பார்த்து ரசித்தார். பின்னர் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குனர் மாரிசெல்வராஜையும் பாராட்டினார்.
அப்போது அவர்களிடம் "தலைவர் கலைஞர் இந்தப் படத்தை பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் பார்த்த சிறந்தபடம் இது. திரைப்படக் குழுவினருக்கு என் வாழ்த்துகள்" என்று கூறினார்.