மேகதாது அணை கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அண்மையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முடிவைக் கைவிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக செயல்பட்டுவருகிறது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 12ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் "மேகதாது அணை திட்டத்துக்கு கர்நாடகத்துக்கு எந்த அனுமதியும் மத்திய அரசு வழங்கக்கூடாது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது தஞ்சையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு தீவிரம் காட்டுவதை எதிர்த்தும், காவிரியில் கூடுதலாக நீர் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றுவரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மேகதாதுவில் கர்நாடக அணை கட்டினால் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள், 5 கோடி மக்கள், 25 லட்சம் ஹெக்டர் ஏக்கர் விளைநிலங்களும் பாதிக்கப்படும். தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக அழிவை சந்தித்து பாலைவனமாகும். எனவே அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அணைக்கு வரைவு திட்டம் கொடுத்த பிரதமர் அலுவகத்தின் செயல் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருவதாக போராட்டக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.