மாநில மனித உரிமைகள் ஆணைய வெள்ளி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும் இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் அருண் மிஷ்ரா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில், மனித உரிமை மீறல் புகார்களைச் சிறப்பாக கையாண்ட ஆட்சியர்கள், எஸ்.பி.களுக்கு முதலமைச்சர் விருது வழங்கினார். இதில், திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமர் மாவட்ட ஆட்சியர்களுக்கும், மதுரை காவல் ஆணையருக்கும், கோவை எஸ்.பி.க்கும் விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் 1997ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர்தான் மனித உரிமை ஆணையத்தை அமைத்தார். மனித உரிமை மாண்புகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். மனித உரிமைகளைக் காக்கும் பொறுப்பில் இருந்து ஒருநாளும் தவற மாட்டோம்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். அதன்படி, ஆணையத்தில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். முன்னதாக பேசிய உறுப்பினர், ஆணையத்தின் விசாரணை குழுவில் காவல்துறையின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று சொன்னார். இதுகுறித்தும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். மனித உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்களுக்காக தொடர்ந்து போராடுபவர்களை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பது குறித்தும் ஆராயப்படும். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும்.
எந்த ஒரு தனிமனிதனின் உரிமையும் மீறப்படக்கூடாது. எத்தகைய சமூகமும் எதன் பொருட்டும் இழிவுப்படுத்தக் கூடாது. இதற்கு காரணமான யாரும் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பிவிடக்கூடாது இவை மூன்றும் இந்த அரசின் மனித உரிமை கொள்கை என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் அறிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.
உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் எனது சில கோரிக்கைகளையும் முன் வைக்கிறேன். பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழ் மொழி, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.