பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தங்களது சொத்துக்களை விற்று குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். ஆனால் சமீப காலமாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் சேர்த்து படித்து வந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது இருவேல்பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமண ஆனந்த் - ஜெயஸ்ரீ தம்பதியர்.
இதில் ஆனந்த் அந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களுக்கு ஏழு வயதில் பரிமளா தேவி, ஐந்து வயதில் பவித்ரா தேவி என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களை ஏற்கனவே தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார். அந்த வகையில் ஊராட்சி மன்ற தலைவர் தனியார் பள்ளியில் படித்து வந்த தனது இரு பிள்ளைகளையும் அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளார். ஆனந்த் இந்த நிலையில் அவர்களை அங்கிருந்து மாற்றி அவரது ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்துள்ளார்.
நேற்று ஊராட்சி மன்றத் தலைவர் என்ற முறையில் குடியரசு தின விழாவில் பங்கேற்று கொடியேற்றிய ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் தனது மகள்கள் இருவரையும் அழைத்துச் சென்று பரிமளாதேவியை மூன்றாம் வகுப்பிலும், பவித்ரா தேவியை ஒன்றாம் வகுப்பிலும் சேர்த்துள்ளார். அந்த வகையில் ஊராட்சி மன்ற தலைவர் தனியார் பள்ளியில் படித்து வந்த தனது இரு பிள்ளைகளையும் அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அது குறித்து அவர் கூறும்போது, “நான் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கிராமத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். அந்த அடிப்படையில் தான் தனியார் பள்ளியில் படித்து வந்த எனது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்துள்ளேன். அரசுப் பள்ளியில் அனைத்து சலுகைகளும் தரமான கல்வியும் வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு காரணம் எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு முன் வரவேண்டும்” என்று கூறுகிறார் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த்.
தலைமை ஆசிரியை அன்புக்கரசி இனிப்பு மற்றும் சீருடைகள், புத்தகங்கள் கொடுத்து ஊராட்சி மன்ற தலைவரின் பிள்ளைகளை வரவேற்று வாழ்த்தினார். இந்த சம்பவம் பரவி பல தரப்பினரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.