சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மருத்துவ அறிவியல் மாநாட்டை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்வின் மேடையில் பேசிய முதல்வர், ''இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்டு திமுக ஆட்சி தமிழகத்தில் கலைக்கப்பட்டது. மிசா சட்டம் வந்தது. அந்த மிசா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருக்கக்கூடிய நிலை எனக்கு ஏற்பட்டது. ஒரு வருடம் சிறையில் இருந்தேன். அப்படி சிறையில் இருந்த பொழுது சைனஸ் பிரச்சனை வந்திருச்சு. அப்பொழுது ட்ரீட்மென்ட்க்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு என்ன அழைத்துக்கொண்டு போவாங்க போலீஸ் பாதுகாப்போடு. அப்படி அழைத்துக் கொண்டு போய் சிகிச்சை கொடுப்பார்கள்.
நான் சிறையில் இருந்து பொது மருத்துவமனைக்கு வரக்கூடிய செய்தி என்னுடைய தாய்க்கு தெரிந்து என்னுடைய தாய், தங்கை, தம்பி என்னுடைய வீட்டில் இருந்து பல பேர் புறப்பட்டு என்னை பார்க்க வருவார்கள். வரும்பொழுது கையில் சூப் எடுத்துட்டு வருவாங்க எனக்கு கொடுப்பதற்காக. சில நேரங்களில் சில காவலர்கள் தாராளமாக விட்டு விடுவார்கள். ஆனால் சில நேரங்களில் சில காவலர்கள் விட மாட்டார்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்கள். அது அவர்களுடைய டூட்டி. அப்படிப்பட்ட நேரங்களில் டாக்டர் காமேஸ்வரனை பார்க்க அறைக்குப் போகும் பொழுது போலீசும் உள்ளே வருவார்கள். நான் பேஷண்ட்டை பார்க்க வேண்டும் நீங்கள் வெளியே இருங்கள் என்று போலீசை வெளியே நிற்கவைத்து விடுவார் மருத்துவர் காமேஸ்வரன். அங்கு அவருடைய பர்சனல் ரூம் இருக்கும். அங்கே என் அம்மா இருப்பார்கள். அவர்களை கூப்பிட்டு சூப்ப குடுங்க என்று சொல்வார். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். அப்படிப்பட்டவரின் புதல்வராக இருக்கக்கூடிய மோகன் காமேஸ்வரன் அவரது தந்தை வழி நின்று, தந்தை போலவே தந்தை விட இன்னும் சிறப்பாக அந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார். மருத்துவத்துறையில் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது'' என்றார்.