கடந்த அக்.2 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது. அதில் விசிக தலைவர் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''காந்தி மது ஒழிப்பிற்கு போராடியவர். அவருக்கு இவர் மரியாதை செய்யவில்லை மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். அவருடைய கொள்கைக்கு அது எதிராக இருக்குமோ என்று தமிழிசை சொல்லியுள்ளார். தமிழிசை என்ன சொல்ல வருகிறார் என்றால் திருமாவளவன் தினந்தோறும் பாட்டிலை திறக்க கூடிய ஆள் என்று சொல்கிறார். அக்கா தமிழிசை அவர்களே நீங்கள் குடிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். உங்களை போல் எனக்கும் அந்த பழக்கம் இல்லை.
நான் தடை அறிவியல் துறையில் ஒரு அறிவியல் உதவியாளராக, ஒரு இளநிலை விஞ்ஞானி என்ற பொறுப்பில் பணியாற்றினேன். அப்பொழுது ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு டிவிஷன் மாற்றுவார்கள். அதில் ஒரு டிவிஷன் மதுவிலக்கு துறை. மதுவிலக்கு துறையில் என்னவென்றால் போலீஸ் பிடித்துக் கொண்டு வரும் கள்ளச்சாராயம், திருட்டுத்தனமாக வரும் மது ஊறல், மது ஆலைகள் உற்பத்தி செய்யும் பீர், விஸ்கி, பிராண்டி எல்லாம் அங்கே எங்களிடம் தான் வரும்.
பிப்பெட்டை வைத்து உறிந்து அதை குடுவையில் போட்டு அதை ஆய்வு செய்து அதில் எவ்வளவு ஆல்ஹகால் இருக்கிறது என்று கண்டுபிடித்து சர்டிபிகேட் கொடுக்கின்ற இடத்தில் நான் வேலை செய்தேன். நான் கையெழுத்து போட வேண்டும். பீரில் நான்கிலிருந்து 5% தான் ஆல்கஹால் இருக்க வேண்டும். விஸ்க்கியில் 35 சதவீதத்திற்கு மேல் இருக்கும். பிராந்தியில் 40 க்கு மேல் இருக்கும். ராவாக குடிக்க முடியாது. பீரை அப்படியே ஊற்றிக் கொள்ளலாம். ஆனால் பிராந்தி, விஸ்கியை தண்ணீர் ஊற்றி கலந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் அதில் அதிக அளவு அடர் ஆல்கஹால் இருக்கும். அது குடலை அப்படியே புண்ணாக்கி விடும். சோதனையின் போது விரும்பினால் நாம் உறிஞ்சி குடிக்கலாம். அது யாருக்கும் தெரியாது. டேஸ்ட் பண்ணி பார்க்கலாம் யாருக்கும் தெரியாது. ஒரு ஓரத்தில் தான் உட்கார்ந்து வேலை செய்வோம். அந்த வேலை செய்தவன் நான். அப்பக்கூட தப்பி தவறி கூட நாவில் ஒரு சொட்டு மது கூட பட்டதில்லை'' என பேசியிருந்தார்.
இந்நிலையில் திருமாவளவனின் பேச்சுக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், 'விசிக தலைவர் திருமாவளவனை இதுவரை நாகரீகம் தெரிந்த அரசியல்வாதி என நினைத்துக்கொண்டிருந்தேன். மாநாட்டில் பேசியதை பார்த்தால் அவரை வக்கிரத்தின் அடையாளமாக பார்க்கிறேன். பரந்த மனப்பான்மையோடு பிரதமர் மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளார். கொள்ளை வேறுபாடுகள் இருந்தாலும் தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.