திருச்சி தூய வளனார் (செயின்ட் ஜோசப்) கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் வகையில், "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்கிற தலைப்பில் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.
இக்கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பார்வையிட்டார். உடன் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். கண்காட்சியை கண்டுகளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், “திருச்சி நமது ஊர். முதலமைச்சரின் புகைப்படக் கண்காட்சியை பார்க்க வந்ததில் சந்தோஷம். எவ்வளவு உயரத்தை நாம் அடைய வேண்டுமோ அதற்கு உண்டான வழிகளையும் தியாகத்தையும் தாண்டித் தான் வரவேண்டும் என்பது இதைப் பார்த்த பின் தான் தெரிந்தது.
மிகப்பெரிய ஆளுமை கொண்ட மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும் வாழ்க்கையில் அதிகமான விஷயங்களைத் தாண்டி முதலமைச்சர் இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார். அது இந்த கண்காட்சியை பார்க்கும் பொழுது தெரிந்தது. இந்த கண்காட்சியை பார்ப்பவர்கள் எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும். வாழ்க்கையில் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நம்மாலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த கண்காட்சி ஏற்படுத்துகிறது.
இந்த கண்காட்சியில் முதலமைச்சர் சிறுவயதில் இருக்கும் புகைப்படம் பிடித்தது. அதை இதுவரை பார்த்ததில்லை. அதை முதன்முறையாக பார்க்கும் போது மிகப்பிடித்தது. சிறையில் இருந்த போது முதல்வர் பட்ட துன்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அதைப் பற்றி இதுவரை கேள்வி மட்டும் தான் பட்டுள்ளேன். முதல் முறையாக இப்பொழுது தான் பார்த்தேன்” எனக் கூறினார்.