தி.மு.க தலைவர் கலைஞர் மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
’’தமிழகத்தின் முதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்வருமான, தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்கள் காலமானச் செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கடந்த 70 வருட அரசியல் வாழ்வில் 50 ஆண்டு காலம் திமுகவின் தலைவராக இருந்து, ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக திகழ்ந்த ஐயா கருணாநிதி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது 14 வயது முதல் தனது சளைக்காத உழைப்பால் மேலெழுந்து தமிழகத்தின் உச்சப் பதவியை அடைந்து அதை ஐந்து முறையாக தக்கவைத்தது சாதாரண ஒன்றல்ல. அவரது அளவற்ற உழைப்பு இளம் தலைமுறையினர் கற்க வேண்டிய ஒன்றாகும்.
ஒரு இலக்கியவாதியாய், கவிஞனாய், எழுத்தாளனாய், பத்திரிக்கை ஆசிரியராய், திரைப்பட வசனகர்த்தாளராய், நாடக ஆசிரியராய், மாநிலத்தின் முதலமைச்சராய், எதிர்க்கட்சி தலைவராய், ஒரு அரசியல் கட்சியின் ஐம்பது ஆண்டுகால அடையாளமாய் என ஐயா கருணாநிதி பன்முக தன்மைக் கொண்ட ஆளுமையாக விளங்கினார். தமிழகத்தின் மாபெரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்த பொழுதிலும், எழுதுவதற்கு, படிப்பதற்கென நேரம் ஒதுக்கி தன் இறுதிக்காலம் வரைக்கும் தன் அறிவாற்றலை முனை மழுங்கா கூர் என தீட்டி திகழ்ந்த ஐயா கருணாநிதி அவர்களின் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு படிப்பினை.
இந்திய துணைக்கண்டத்தின் முதுபெரும் தலைவராக இருந்து ஐந்து தலைமுறைகளைக் கண்டு, தேர்தல் வாழ்வில் தோல்வி ஒன்றே அறியாத மாபெரும் ஆளுமையாக திகழ்ந்தவர் ஐயா கருணாநிதி அவர்கள். இரவு-பகல் அறியாது உழைத்த ஒய்வறியா அந்த பெருமகன் இறுதியில் நிரந்தரமாக ஒய்வுக் கொண்டார் என்ற செய்தி ஈடு செய்ய இயலா இழப்பாகும்.
தமிழகத்தின் மாபெரும் அரசியல் ஆளுமையான ஐயா கருணாநிதி அவர்களைப் பிரிந்து துயருற்று இருக்கும் கோடிக்கணக்கான திமுக தொண்டர்களின் கண்ணீரிலும், அவரது குடும்பத்தாரின் சோகத்திலும் பங்கேற்கிறேன். எனது ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆறுதலையும் தெரிவிக்கிறேன்.’’- கூறப்பட்டுள்ளது.