ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் நாளுக்கு நாள் குவிந்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், நடிகர் ராஜ்கிரண் ஆன்லைன் ரம்மியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,' சீட்டாட்டம் என்பது மிக மிக மோசமான சூது. சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம். சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும் போதை போன்ற மயக்கமும் அந்தப் பழக்கத்தைத் தொட்டவரை விடவே விடாது. சீட்டாடத் தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்குத் தயங்கமாட்டார்கள் அதற்கு அடிமையானவர்கள். இதர்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தான் 'எல்லாமே என் ராசாதான்' என்று ஒரு படமே எடுத்தேன். அந்த காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாக இருந்தது. காவல்துறை கைது செய்தால் கேவலமாகிவிடும் என்ற பயமும் இருந்தது.
ஆனால் இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் காவல்துறை பற்றிய பயமில்லாமல் எல்லோரும் ஆடலாம் என்றாகிவிட்டது. இந்த சமூக சீர்கேட்டிற்கு பிரபலங்கள் எல்லாம் பாமர மக்களை ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு கூவிக் கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுவரை நம் தமிழ்நாட்டில் மட்டும் 37 உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது. 37 குடும்பங்கள் பரிதவித்துக் கிடக்கின்றன. தமிழக அரசு இந்த நாசக்கார, உயிரோடு விளையாடும் விளையாட்டைத் தடுக்க தக்க சட்டம் இயற்றியும், அதைச் செயல்படுத்த முடியாமல் முட்டுக்கட்டைப் போடப்படுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.