அண்மையில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 8 நாட்களுக்கு மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர், உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற நிலையில் தற்பொழுது சென்னையிலும் கரூரிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. கரூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டிலும், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு இல்லத்தில் சோதனையானது நடைபெற்று வருகிறது. அதேபோல் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பிய அமைச்சர் செந்தில் பாலாஜியை சூழ்ந்த செய்தியாளர்கள் அவரிடம் சோதனை தொடர்பாக கேள்வி எழுப்பினர். 'இந்த சோதனை குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா?' என்ற கேள்விக்கு, ''எனக்கு தகவல் சொல்ல வேண்டி இல்லை. சட்டப் பிரகாரம் அவர்கள் எனக்கு சொல்லவும் மாட்டார்கள். நான் வாக்கிங் போய்விட்டேன். இப்பொழுதுதான் முடித்துவிட்டு வந்தேன். போற வழியில் தகவல் சொன்னார்கள் என்னுடைய நண்பர்கள். அவர்களை அனுப்பிவிட்டு வந்துவிட்டேன். பார்ப்போம் என்ன நடக்குது என்று.
வருமான வரிச் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அடுத்தது இப்பொழுது அமலாக்கத்துறை வந்திருக்கிறது என நண்பர்கள் சொல்லித்தான் தெரியும் வாக்கிங்கை பாதியில் கட் செய்துவிட்டு டாக்ஸி பிடித்து வந்திருக்கிறேன். பரவால்ல பார்த்துக் கொள்ளலாம் என்ன நோக்கத்தில் வந்திருக்கிறார்கள்; என்ன தேடுகிறார்கள்; எதை தேடுவதற்காக வந்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். முடியட்டும் உள்ளே ஆபிஸர் வெயிட் பண்றாங்க. பாக்கலன்னா தவிறாகிவிடும். நான் பார்த்து முடிச்சுட்டு உங்களுக்கு சொல்கிறேன்.
வருமான வரித்துறையாக இருந்தாலும் அமலாக்கத்துறையாக இருந்தாலும் எந்த சோதனைக்கு வந்தாலும் முழு ஒத்துழைப்பு கொடுக்க நாங்கள் தயார். எந்த ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி விளக்கம் கேட்டாலும் அதற்கு விளக்கம் சொல்வதற்கு நாங்கள் தயார். சோதனை முடிவதற்கு முன்பே நாம் கருத்து சொல்ல முடியாது. முடிந்த பிறகு உங்களிடம் பேசுகிறேன்''என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்றார்.