தமிழகத்தில் வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகளை ஒவ்வொரு கட்சிகளும் மேற்கொண்டு வருகிறது. தற்போதே தொகுதிப் பங்கீடு, தேர்தல் கூட்டணி எனத் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய, இந்தியத் தேர்தல் ஆணையத்தை நாடி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் ஒன்றைத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ளார். அதில்,
நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது எனது தனிப்பட்ட முயற்சி. இதற்கும் விஜய்க்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. விஜய் மக்கள் இயக்கம் இன்று நேற்று தொடங்கப்பட்டது அல்ல. உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சியாகப் பதிவு செய்துள்ளேன். எதிர்காலத்தில் இந்த இயக்கத்தில் விஜய் இணைவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார். அதேபோல் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறிக்கை வாயிலாக நடிகர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். எனது பெயரையோ புகைப்படத்தையோ கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் எனது தந்தை எடுக்கும் முடிவுகள் என்னைக் கட்டுப்படுத்தாது. தனது தந்தை கட்சி தொடங்கி இருப்பதற்காக, ரசிகர்கள் அதில் இணைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.