புதுக்கோட்டை மாவட்டம், குன்றான்டார்கோவில் ஒன்றியம், கீழநாஞ்சூர் கிராமத்தில், பழமையான சிவாலயம் ஒன்று உள்ளது. இங்கு கல்வெட்டுகள் இல்லாவிட்டாலும், சிற்ப அமைப்பின் அடிப்படையிலும் கட்டுமான அடிப்படையிலும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இக்கோயிலை அடையாளப்படுத்த முடியும். இக்கோயிலின் விநாயகர், கிருஷ்ணன், அம்மன் சிலை போன்ற பழமையான சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை மர்ம நபர்கள் சிலர் சிதைந்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில், “சிலைகளைக் கோவிலில் புகுந்து உடைத்துச் சேதப்படுத்திய சமூக விரோதிகளின் மீது பழங்கால வரலாற்றுச் சின்னங்களை அழித்தல் , பண்பாட்டு மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவித்தல், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் உரிய தண்டனை பெற்றுத் தருமாறு பணிவுடன் வேண்டுகிறோம்”. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வரலாற்று ஆய்வாளர்கள் இதுகுறித்து கூறும் போது, “இதே போல பழமையான கோயில்களைப் புனரமைப்பு செய்வதாகக் கூறி பல கல்வெட்டுகளும் , சிற்ப வேலைகளும் சிதைக்கப்படுகின்றன. இதற்கு மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இன்மையும், காரணமாக உள்ளது. பழமையான கட்டுமானங்களை மறு சீரமைப்பு செய்யும் போது, தொல்லியல் துறை அனுமதியைப் பெறாமல் உள்ளூர் அளவில் சீரமைக்கப்பட்டால், உள்ளூர் நிர்வாகத்தினர் அதனைத் தடுத்து நிறுத்தி, மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுக்க வேண்டும். அவ்விடத்தை அவர்கள் ஆய்வுக்குட்படுத்திய பின்பு, உரியப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான உறுதிமொழியைப் பெற்று பணியைத் தொடர அனுமதிக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் பழமையான கட்டுமானங்களையும் , இந்தியத் தொல்லியல் துறையின் திருச்சி வட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு பாதுகாக்கப்பட்ட சின்னங்களையும், தொல்லிடங்களையும் கொண்ட மாவட்டமாக இருப்பதால், கிராம அளவில் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதை ஆய்வு செய்ய மாவட்ட அளவில் பாதுகாப்புக்குழு ஒன்றினை அமைத்திடவும் வேண்டுகிறோம்” என்றனர்.